Tuesday, September 28, 2010

மகாபலி எனும் முப்பிடாதி ...

கோவில்பட்டி  இரயில் நிலையம் ...

முத்து நகர் விரைவு வண்டி தனக்கே உரிய நிதானத்துடன் நடைமேடையில் வந்து நிற்க,முன்பதிவில்லா பயணச்சீட்டுடன் விரைவாக கடைசி வகுப்பு பெட்டியில் ஏறினேன் , கூட்டம் சற்று அதிகமே என்றாலும்,இந்த வண்டியில் செல்வதாகதான் வீட்டில் அனைவரிடமும் சொல்லி வந்த காரணத்தாலும்,முன்கூட்டியே பயணத்தின்  எண்ண ஓட்டங்களில் இந்த வண்டி கலந்துவிட்டதாலும் அந்த கூட்டத்தினை பொருட்படுத்தாமல் முண்டி அடித்து ஏறினேன் ;
நிற்பதற்கே சற்று கடினமான சூழல் ,அனுசரித்து நின்று கொண்டு எனது பெட்டி மற்றும் உடமைகளை அங்கிருந்த பரணில் வைத்து விட்டு வெகுநேரம் நின்று கொண்டுவந்தேன் , இரயில் மதுரை சந்திப்பை அடைந்தவுடன் சொற்ப பயணிகளே இறங்கினர் ,இதில் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து ஒருவர் மட்டுமே இறங்கினார் ,வாயில் அருகே  சற்றே சிறிய இடம் கிடைத்தது , குத்துகால் இட்டு அமர்ந்தேன் ; அருகில் ஒருவர், வறுமையின் வாசம் மேனியெங்கும் சற்றே நகர்ந்து எனக்கு நன்றாக அமரும்படி ஜாகை செய்தார் ;   "எதுவரைக்கும் பிரயாணம் ?" எனக்கு இடம் தந்த மகாபலி என்னிடம் வினவினார் .... மரணம் வரைக்கும் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் ... " மெட்ராஸ் " ...  " ம்... நானும் " என்றார் நான் அவர் பற்றி வினவும் முன்பே ..." என்ன சோலியா ?!" இது அவர் , இங்கேயே  " இன்டர்வியு ஆரம்பிச்சாச்சா ... கொஞ்சம் இடம் கொடுத்ததுக்கு இன்னும் என்ன கேள்வி எல்லாம்   கேட்கப்போறாரோ " இது நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் ... நிற்க   
எனது பயணம் பற்றி ஒரு பார்வை 
பிறந்தது அம்பை [ அம்பாசமுத்திரம் , நெல்லை மாவட்டம் ] அம்மாவின் ஊர் ,படிச்சது வளர்ந்தது எல்லாம் கோவில்பட்டி [ தூத்துக்குடி மாவட்டம் ] அப்பாவின் ஊர் , சொந்தமா ஊர்ல  ஒன்னும் இல்லாததால அதை தவிர்த்துவிட்டேன்[சொந்த ஊர் என்பதை ] , ஒரு வழியா கஷ்டப்பட்டு Diploma In Automobile Engg வரைக்கும் படிச்சாச்சி [ இங்கே கஷ்டப்பட்டு என்று கூறியது நான் பட்டவை அல்ல என்னால் என் அம்மா,அப்பா,வாத்தியார் , நண்பர்கள் ,கல்லூரி ...என சமூகத்தின் அங்கங்கள் பட்டவை ]; இனி ஏது செய்வது ? வியாபாரம் ? குடும்பச்சூழல் அனுமதிக்காது ! மேற்படிப்பு ? கீழ படிச்சதே கிழிஞ்சி போச்சி ! ஊரின் கேள்விகளுக்கு விடை இல்லை என்னிடத்தில் ; வேலை தேடி பயணம் , எங்கே செல்வது?,பல சினிமாக்களில் வருவது போல்சென்னை சென்ரல் நிலையம் நிழலாடிச் செல்ல ; சென்னை செல்வது என தீர்மானித்தேன் , இங்கு பல ஆட்டோமொபைல்  தொழிற்சாலைகள் இயங்குவதால் , சில அரசியல்வாதிகளின் செல்வாக்கில் வேலை வாங்கி விட  எத்தனித்தேன் ! பலன் ஏமாற்றம் , பல முறை சென்னை செல்வதும் வருவதுமாக , மேலும் என் தந்தைக்கு வீண் செலவுகள் ,இறுதியாக உறவுக்காரர்  ஒருவரிடம் வேலைக்காக பல முறை தொடர்பு கொண்டபொழுது அவர் இங்கிருந்து தங்கி வேலை தேடும் படி கூறினார்; எனக்கும் அது சரி எனப்பட்டது ; தேடலின் பொருள் விளக்கினார்,புறப்பட்டேன் இனி  எனது பயணத்தில் .... 

பல முறை சென்னை சென்று வந்த அனுபவம் இருந்தும் இந்த பயணம் சற்று கூடுதலான மனக்குழப்பம் , வேலை பற்றி , அதன் சூழல் பற்றி , நாளை பற்றிய எனது கவலை அதிகரித்த வண்ணம் இருந்தது ; மகாபலி தனது கேள்விக்கனைகளை தொடுக்க ஆரம்பித்தார் ; .
" என்ன சோலியா ?!" ....அவர் விடுவதா இல்லை ...
" வேலைக்கு "...
" என்ன வேலை பாக்கிக "
" இனிமே தான் தேடனும் ..." ஏற இறங்க பார்த்தார் ... என்ன நினைத்தாரோ  ... எனக்கேதும் புரியவில்லை 
" கோவில்பட்டியா  ?! "
" ஆமா ... உங்களுக்கு ?..." 
" அம்பை "...
" அப்படியா ?! எங்க அம்மா ஊரும் அதான் ...அம்பைல எங்க ?!"
" முடப்பாலம்... உங்கம்மாவுக்கு "
" வாகைக்குளம் " என்றேன்  அடுத்த நொடி அவர் " தேவமாரா " என்று வினவினார் ; " ஆமா " என்றேன் ,பின் அவர் எனது குடும்பம் பற்றி தெரிந்தவுடன் எனது தாய் வழி உறவு பற்றி தெரியும் என்பதுபோல் பேசிக்கொண்டு வந்தார் ; நானும் அவர் பற்றி சிலவற்றை சரியாகவே யூகித்தேன் , முடப்பாலம் என்றவுடன் அது தலித் மக்கள் அதிகம் இருக்கும் குடியிருப்பு பகுதி, அவர் என்னிடம் கேட்டதுபோல் நான் அவரிடம் கேட்கவில்லை , பின் அவரே அவர் பற்றியும் அவரது பயணம் பற்றியும் என்னிடம் கூறிக்கொண்டு வந்தார் ;வயல் வேலை மட்டுமே தெரிந்த மக்கள் விவசாயம் குறைந்தது பற்றி ஆதலால் அவர்கள் வேலையின்மை பற்றி பலவற்றை பேசிக்கொண்டே வந்தார் , அவரது வெகுளி பேச்சும் எனக்கு அவர் தந்த ஒரு வித மரியாதையும் அவரிடம் என்னை நெருங்கி பழக வைத்தது ;சற்று தூக்கம் கண்ணை முட்ட இருவரும் அயர்ந்தோம் ...பயணத்தில் தூக்கம் அசௌகர்யம் கலந்த ஆனந்தம்.   



                            சென்னையில் விடியல் , மரங்கள் நிறைந்த கே.கே நகர் சாலை பகுதி மொட்டை மாடி அறை ,இரு சக்கர வாகனத்தில் வேகமாய் பயணம் , டைடல் பார்க்கில் உள்ள ஓர்  அலுவலகத்தில் வேலை , வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே எனது அலுவலகத்திற்கு அருகிலே நாகரீக மங்கை எனக்கு தோழியானாள், பின் ஒரு நாள் அவளிடம் அவள் மேல் உள்ள காதலை வெளிப்படுத்த அவளும் அதனை அங்கீகரித்தாள்,நாட்களுக்கு சிறகு முளைத்தன வேகமாய் பறக்கிறது ;
            கடற்கரை முத்தம் , கையில் ஐஸ்கீரிம் , சத்யம் சினிமா என வாழ்கை வரையறுக்கப்பட்டது ; அச்சமயத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் அவளது தந்தை தீவிரம் காட்ட என் தோழி என் தோளில் முகம் புதைத்து அழுகிறாள் " இனி நீயில்லாமல் என்னால் வாழ முடியாது "  ஆறுதல் கூறுகிறேன் நான் , " உங்க அப்பாகிட்ட நான் பேசுறேன் , எங்க வந்து பேசனும் ...",    "மாம்பழமா ... எக்மோரா ...?! மாம்பழமா ... எக்மோரா ... எங்க இறங்க போறீங்க ?!" என்னை கனவுகளில் இருந்து மீட்டெடுத்தார் என் பிரயாண நண்பரான அந்த மகாபலி ,நான் செல்லும் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை நெருங்கியிருந்தது ,கனவுலக பிரஞ்யையிலிருந்து வெளியேறினேன் ,  " எக்மோர்...நீங்க ...?" ,  " நானும் அங்கதான் இறங்கனும் .... வேப்பேரில தானே கடை  அங்கேயே ஓட்டலுக்கு பின்னாடி தங்கிருக்கோம்...அது ஆறேழு பேரு இருக்கோம் " என்று அவர் வேலை பார்க்கும் உணவு விடுதி பற்றியும் அவரின் வறுமையான வாழ்வு பற்றியும் கூற ... கூற எனக்கு அடிவயிற்றில் புளியைகரைக்க ஆரம்பித்தது . 



                                                      பின்  வண்டி  எக்மோர்  ரயில் நிலையம் வந்தடைந்தது , நானும் மகாபலியும் எங்களது உடமைகளை இறக்கி வைத்தோம் , என் உடமைகள் கொஞ்சம் அதிகம் என்பதால் அவர் எனக்கு உதவி செய்ததுடன் , எனது உடமைகள் சிலவற்றை ரயில் நிலைய வாசல் வரை தூக்கி வந்து உதவினார் ; " டீ  குடிக்கலாமானே  " என்றேன் , அவரும் நானும் எக்மோர் எதிரில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தினோம் , அவர் வாழ்கையின் வலிகள் பற்றியும் சென்னை வாழ்க்கையின் இன்னொரு கோர முகம் பற்றியும் என்னிடம் கூறினார் , அது அவரின் அனுபவங்கள் ;பின் இருவரும் இரு வேறு திசைகளாணோம் பிரிய மனதில்லை அவரை மீண்டும் தொடர்பு கொள்ள இருவரிடமும் அலைபேசியோ மற்ற எந்த தொலை தொடர்பு வசதியோ இருவரிடமும் இல்லை , வாழ்கையின் பயணத்தில் நான் சந்தித்த வெள்ளந்தியான மனிதர் , என்னை விட வயதில் மூத்தவர் , எனக்கு மிகப்பெரிய மரியாதையும் , பாசத்தையும் இந்த ரயில் பயணத்தில் எனக்கு காட்டியவர் ,அவரது இந்த வறுமை வாழ்க்கையில் மனைவியை பிரிந்து அவர் படும் இரவுகளின் துயரம் பற்றி கூட வெகுளியாக என்னிடம் பேசியவர் , இன்னும் சற்று நேரத்தில் என்னிடம் இருந்து விலகி செல்வார் ,பிரிவின் வலி அவருக்குமே இருந்தது என்னால் உணர முடிந்தது ; "பாத்து பத்திரமா இருந்துக்கோங்க ...!" என்று அவர் கூறிய அந்த வார்த்தையில் என் தாய் ,தந்தைக்கு பின் ஒரு உண்மையான நெகிழ்வு ;நான் கனவுகளின் கைக்குழந்தை இந்த ரயில் பயணத்தின்போதே எண்ணற்ற கனவுகளும் , கற்பனைகளும் வாழ்கை பற்றிய பயங்களும் கொண்டவன் , இனி என்ன செய்யபோகிறேனோ என்று நினைக்கையில் என்னை விட்டு பத்து அடி தூரம் சென்றிருந்தார் முப்பிடாதி...அந்த மகாபலியின் உண்மை பெயர் முப்பிடாதி ...



Wednesday, September 1, 2010

வணக்கம் , நான் சக்திவேல் இந்த இணையத்திற்கு புது வரவு , வெகு நாட்களாக ; எனது எண்ண ஓட்டங்களை யாரிடம் பகிர்வது என்ற ஐயப்பாட்டில் இருந்தபோது இது ஒரு வழி என தேர்வு  செய்து இங்கு எழுத முற்படுகிறேன் ; இதில் பிழை இருப்பின் திருத்த, கருத்து இருப்பின் ஆதரிக்க விழைகிறேன் ; நன்றி .